மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு

 

நீடாமங்கலம், ஏப்.29: நீடாமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய உதவிபொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின் வாரிய உதவி பொறியாளரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் நீடாமங்கலம் தாலுக்கா பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மும்முனை மின்சாரம் வழக்கத்தை விட மிகவும் குறைந்து வருவதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவும் சிரமமாக உள்ளது.

அதோடு கோடை சாகுபடி செய்த நெல் பயிர்கள் கருகி வருகிறது. எனவே தொடர் மின் வெட்டை சரி செய்து பழைய முறையில் மின்சாரத்தை வழங்கிட வேண்டும் என்று கோவில்வெண்ணி மற்றும் பழைய நீடாமங்கலம் துணை மின் நிலைய அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம். போர்க்கால அடிப்படையில் சரி செய்து தர வில்லையெனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகிற மே 2ம்தேதி நீடாமங்கலம் பகுதியில் மூன்று இடங்களில் சாலை மறியல் நடத்த உள்ளதாக மனுவில் கூறியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், கந்தசாமி, ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி, ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் இருந்தனர்.

The post மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு appeared first on Dinakaran.

Related Stories: