தரங்கம்பாடி, டிச.30: தரங்கம்பாடியிலிருந்து பூம்ம்புகாருக்கு தில்லையாடி வழியாக சுற்றுலா பயணிகளுக்கு பயன்படும் வகையில் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம், தரங்கம்பாடி சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. அங்கிருந்து பொறையார், தில்லையாடி, திருக்கடையூர், கீழபெரும்பள்ளம் வழியாக பூம்புகாருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தில்லையாடி பொதுநலச் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கலியபெருமாள் கூறியதாவது: தரங்கம்பாடி மத்திய சுற்றுலாத் துறையால் சிறந்த சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட ஊர். அங்கிருந்து பொறையார், தில்லையாடி, திருக்கடையூர், கீழபெரும்பள்ளம் வழியாக பூம்புகாருக்கு புதிய பேருந்து இயக்கினால் சுற்றுலா பயணிகள் தில்லையாடியில் உள்ள தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபம், தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து 60, 70, 80வது பிறந்தநாள் யாகம் செய்ய வருகை தரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், கீழபெரும்பள்ளத்தில் அருள்பாலிக்கும் நவகிரங்களில் ஒன்றான கேது பகவான் கோவில் மற்றும் பூம்புகார், தரங்கம்பாடி பகுதிகளை சுற்றுலா பயணிகள் எளிதாக சென்று பார்வையிட முடியும். எனவே மாவட்ட கலெக்டரும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் தில்லையாடி வழியாக தரங்கம்பாடி - பூம்புகாருக்கு புதிய பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நாகை கலெக்டர், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.