திருவாரூர் மத்திய பல்கலையில் ரூ.32 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம், மத்திய நூலகம் வேந்தர் பத்மநாபன் திறந்து வைத்தார்

திருவாரூர், டிச.30: திருவாரூரில் இயங்கி வரும் மத்திய பல்கலைக் கழகத்தில் ரூ 22 கோடி மதிப்பில் வகுப்பறை கட்டிடம் மற்றும் ரூ.17 கோடியில் மத்திய நூலகம் ஆகியவற்றினை வேந்தர் பத்மநாபன் திறந்து வைத்தார். திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் இந்த பல்கலைக்கழகமானது கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ரூ.1000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. தற்போது இந்த பல்கலைக் கழகத்தில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பீகார், ஒரிசா, ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1,750 மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம் மற்றும் மத்திய நூலகம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை திறந்து வைத்து பல்கலைகழகத்தின் வேந்தர் பேராசிரியர் பத்மநாபன் பேசுகையில், 8 ஆயிரத்து 572 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று தளங்களை கொண்ட இந்த வகுப்பறை புதிய கட்டிடமானது ரூ.22 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் 30 வகுப்பறைகள் மற்றும் 46 ஆசிரியர் அறைகள் மற்றும் கருத்தரங்க கூடம் மற்றும் 12 ஆய்வகங்கள் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய நூலகமானது 5 ஆயிரத்து 982 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.17.79 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. எனவே இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஏ.பி.தாஸ், பதிவாளர் டாக்டர் புவனேஸ்வரி மற்றும் பல்கலைக் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: