கிராம மக்களை குறிவைக்கும் வியாபாரிகள் காலாவதி உணவு பொருள் விற்பனை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தென்தாமரைகுளம், டிச. 30:  குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் காலாவதியான  உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது மீண்டும்  அதிகரித்துள்ளது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த விபரீத செயலில் ஈடுபடும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  குழந்தைகளுக்கான பிஸ்கட், கேக், மிட்டாய் வகைகள், எண்ணெயில் பொரித்த சில  வகை உணவுகள்  மட்டுமல்லாமல் மோர், தயிர், எண்ணெய் வகைகள், மசாலா பொடிகள் என  பல்வேறு பொருட்களுமே தற்போது பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும். சில பொருட்கள் சில நாட்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையிலும், சில ெபாருட்கள் தயாரிப்பு தேதியில் இருந்து 6 மாதம், 9 மாதங்கள், 1 ஆண்டு பயன்படுத்தும் வகையிலும் இருக்கும்.  ஆனால் இதை பற்றிய போதுமான விழிப்புணர்வு அனைவரிடமும் இருப்பதில்லை. நகர்புறங்களில் பாக்கெட் பொருட்களை வாங்கும் பெரும்பாலான பொதுமக்கள் அவற்றின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியவற்றை பார்த்து வாங்குகிறார்கள். ஆனால் கிராமப் புறங்களில் இது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை.

இதை பயன்படுத்தி பல்வேறு கடைகளில் காலாவதியான பொருட்களை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டி விடுகிறார்கள்.  குறிப்பாக குழந்தைகளுக்கு விற்பனை செய்கின்ற உணவுப் பொருட்கள் காலாவதியானவை  என்று தெரிந்தும் மனசாட்சியின்றி குழந்தைகளுக்கு கொடுத்து வியாபார  நோக்கத்தில் விற்பனையாளர்கள் செயல்படுகிறார்கள். இவ்வாறு தரம் கெட்ட உணவுப் பொருட்களை உண்ணும் குழந்தைகள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்படுகின்றனர். தற்போது இது  போன்ற காலாவதி பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.  அஞ்சுகிராமம்  அருகேயுள்ள கன்னன்குளம் பகுதியை சேர்ந்த தனேஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகள்  அஞ்சுகிராமத்தில் ஒரு நடனப் பள்ளிக்கு தின்பண்டம் வாங்க ஒரு பேக்கரிக்கு  சென்றுள்ளார். அவசரத்தில் பொருளை வாங்கி சென்றுள்ளார். அடுத்த நாள் சிறுமி  வயிறு வலி என்று கூறியபோது அவர் வாங்கிய  தின்பண்டம் காலாவதியாகி  இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பேக்கரியில் சென்று முறையீடு  செய்து நல்ல பொருட்களை விற்பனை செய்யுமாறு அறிவுரை கூறியுள்ளார். இதே போல் சாமிதோப்பு பகுதியை சேர்ந்த அன்பின் பொன்னித் என்பவர் நாகர்கோவிலில் பச்சை பட்டாணி வாங்கியபோது, அதில் நிறத்தை கலப்படம் செய்து கலந்தது தெரியவந்தது.

 கன்னியாகுமரியில் டிராவல்ஸ் நடத்தி வரும் மகேந்திரன் என்பவர்  அகஸ்தீஸ்வரம் பகுதிக்கு உட்பட்ட ஒரு கடையில் பிஸ்கட் வாங்கி பிரிக்கும்  போது சிறிய வெள்ளை நிறபுழு இருந்துள்ளது. இவை அனைத்தும் காலாவதியாகி இருந்ததும், அவற்றை கடைக்கார்கள் அப்புறப்படுத்தால் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரியவந்தது.  எனவே காலதாமதமின்றி  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து விற்பனையாளர்களின் மொத்த விற்பனை இடங்களில்  அதிரடியாக சோதனை நடத்தி  காலாவதியான  பொருட்களை யார் யார் விற்பனை  செய்கிறார்கள் என்பதை கண்டறிந்து தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக  ஆர்வலர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.திறந்த வெளியில் உணவு விற்பனைதிங்கள்சந்தை: குமரி  மாவட்டத்தில் தற்போது மேலை நாட்டு உணவு வகைகளான தந்தூரி, பார்பிகியூ போன்ற உணவு  வகைகள் பிரபலமாகி வருகின்றன. பைக் அல்லது கார் போன்ற வாகனங்களை இதற்காக  வடிவமைத்து, அதில் மீன், கோழி, மாடு போன்ற கறி வகைகளை தீயில் சுட்டு வேக  வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி சாலையோரங்களிலும், நடைபாதைகளில் நிறுத்தி  வாடிக்கையாளர்களின் கண்ணெதிரே தயார் செய்து வழங்குகின்றனர். இதற்கு மக்கள்  மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. வித்தியாசமான சூழலில் உணவு அருந்த முடியும் என்பதால் இது இளைஞர்கள், இளம் பெண்களை கவர்கிறது. குடும்பமாக பலர் வந்து சாலையோரம்  அமர்ந்து சாப்பிடுவதோடு, பார்சல் வாங்கியும் செல்கின்றனர். இந்த உணவு வகைகள் சுவையாக இருந்தாலும், பாதுகாப்பானதுதானா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. இந்த வகையில் திங்கள்நகர் பேருந்து நிலையம்  முன்பு, மார்க்கெட் ரோடு, தலக்குளம் ரோடு மற்றும் பேரூராட்சி உள்பட்ட  பல்வேறு பகுதிகளிலுள்ள நடைபாதை கடைகளில், திறந்த வெளியில் உணவு பண்டங்கள்  விற்பனையாகிறது. இந்த பகுதியில் உள்ள கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்கள்  மீது சாலையிலுள்ள மாசுக்கள் படுவதாலும், சாக்கடை கொசுக்கள் இப்பண்டங்கள்  மீது அமர்வதாலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து  மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரிடம் எடுத்துக் கூறியும் எவ்வித  நடவடிக்கையும் இல்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி மாவட்ட நிர்வாகம் சாலையோர கடைகளை ஆய்வு செய்து  நடவடிக்கை எடுக்க, உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: