நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் வாலிபர் கைது

நாகர்கோவில், டிச.23: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பட்டீஸ்வரம் கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் டென்னிஸ் டி இயேசுவடியான். ஆட்டோ டிரைவர். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன், தற்போது நாகர்கோவில், மத்தியாஸ் வார்டு பிரைட் தெருவில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் 2.30க்கு, இவர் தனது ஆட்டோவில் பள்ளி மாணவிகளை ஏற்றிக் கொண்டு டெரிக் சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்கனவே இருந்த முன் விரோதத்தில், நாகர்கோவில் மேலராமன்புதூர் சிவன்கோயில் பகுதியை சேர்ந்த சோபிகுமார் என்பவர் வழி மறித்து இயேசுவடியானிடம் தகராறு செய்து கற்களால் சரமாரியாக தாக்கினார். இதில் இயேசுவடியான் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தை பார்த்து ஆட்டோவில் இருந்த மாணவ, மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து இயேசுவடியான் மனைவி சோபியா, நேசமணிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சப் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இயேசுவடியானுக்கும், சோபிக்குமாருக்கும் சவாரி எடுப்பதில் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: