தஞ்சை, டிச. 19: தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 162 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இன்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாகும்.தஞ்சை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தேர்தல்களில் போட்டியிட கடந்த 9ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. 16ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது.இந்த மனுக்கள் நேற்று முன்தினம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பரிசீலனை செய்யப்பட்டது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 11,979 வேட்புமனு பெறப்பட்டன. பரிசீலனையில் 90 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து 11,889 மனுக்கள் ஏற்கப்பட்டன. கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3,494 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் 32 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 3,462 மனுக்கள் ஏற்கப்பட்டன.
