வனதுர்க்கையம்மன் சித்தர் பீடத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்

செய்யூர், டிச. 13: அச்சிறுப்பாக்கம் அருகே ஆட்டுப்பட்டி கோட்டை புஞ்சை கிராமத்தில் உள்ள வன துர்க்கையம்மன் கோயிலில் கார்த்திகை தினத்தையொட்டி தீபத் திருவிழா கோலாகலமாக நடந்தது. செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியம் ஆட்டுப்பட்டி கோட்டை புஞ்சை கிராமத்தில் சுயம்பு வனதுர்க்கையம்மன் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வந்த நிலையில், இந்தாண்டு பெய்த மழையால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பின. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதையொட்டி, வனதுர்க்கையம்மன் சித்தர் பீடத்தில் மழை வழங்கிய இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று, கார்த்திகை மாத  தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதில் சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, கோயிலின் எதிரே சித்தர் குளத்தின் தண்ணீரில் அகல் விளக்கில் தீபங்களை ஏற்றி கொண்டாடினர். தொடர்ந்து, சித்தர் பீடத்தில் உள்ள சுயம்பு சிவலிங்கம், எதிரே தீபங்களால் அலங்கரித்து, வனதுர்கைக்கு விசேஷ தீபாராதனை நடந்தது. அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை சித்தர் பீடத்தின் நிர்வாகி வனதுர்க்கை தாசன் செய்தார்.

Related Stories: