வழக்கு விசாரணைகள் பாதிப்பு எஸ்ஐ இல்லாத திருமங்கலம் ஸ்டேஷன்

திருமங்கலம், டிச.12: திருமங்கலம் டவுன் போலீஸ்ஸ்டேசனில் கடந்த 15 தினங்களாக எஸ்ஐ இல்லாததால் வழக்கு விசாரணையில் கடும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் முக்கிய ஸ்டேசன்களில் ஒன்று திருமங்கலம் டவுன் போலீஸ் ஸ்டேசன். நகராட்சியின் 27 வார்டுகள் மற்றும் அக்கம்பக்கத்திலுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் எல்கையாக உள்ளன. மேலும் இரண்டு பஸ்ஸ்டாண்டுகள், தாலுகா, ஆர்டிஓ, நகராட்சி, ஒன்றிய அலுவலகம் என அனைத்து அரசுஅலுவலகங்களில் நடைபெறும்  போராட்டங்களுக்கும் இந்த ஸ்டேசனின் எல்லையில் தான் வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள திருமங்கலம் ஒன்றிய அலுவலகமும் இந்த ஸ்டேசனின் கீழ்தான் அமைந்துள்ளது.

இந்நிலையில் திருமங்கலம் டவுன் ஸ்டேசன் எஸ்ஐ கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். அதன்பின்பு தற்போது சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு என இரண்டுக்கும் எஸ்ஐ இல்லை. ஓரிரு எஸ்எஸ்ஐ மட்டுமே அதிகாரி என்ற பெயரில் உள்ளனர். இதனால் நகரில் நடைபெறும் எந்த குற்றச்சம்பவங்களுக்கும் உடனடியாக வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் அதிகரித்துள்ள குற்றச்சம்பவங்களை உரிய நேரத்தில் கண்டறிய முடியாத நிலைமை உருவாகியுள்ளது. இந்த ஸ்டேசனில் உள்ள இன்ஸ்பெக்டர் ஐகோர்ட் உள்ளிட்ட மாற்று பணிகளுக்கு அடிக்கடி சென்றுவிடுவதால் திருமங்கலம் ஸ்டேசன் தற்போது முழுவதும் ஏட்டுகளை நம்பியே இயங்கிவருகிறது. வழக்கு தேக்கம், மறியல், போராட்டம் உள்ளிட்ட அனைத்திற்கும் உரிய தீர்வு காண முடியாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தென்மாவட்டத்திலிருந்து மதுரை வருவோருக்கு நுழைவுபகுதியாக திகழும் திருமங்கலம் டவுன் ஸ்டேசனில் இந்த பரிதாபநிலையை மாற்றி புதிய எஸ்ஐக்களை நியமித்து வழக்கு விசாரணையை துரிதப்படுத்த எஸ்பி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Stories: