2 மணி நேரம் இடைவிடாத மழை திருச்செந்தூரில் மழை நீருடன் கழிவுநீரும் வெளியேறியதால் நோய் பரவும் அபாயம்

திருச்செந்தூர், நவ. 27: திருச்செந்தூரில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மழை விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் நிலையம் அருகே, காமராஜர் சாலை, கீழ ரதவீதி, தெற்கு ரதவீதி சந்திப்பு, சன்னதி தெரு, பிடிஆர் நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. சுமார் ஒரு அடி உயரத்திற்கு மழைநீர் சென்றதால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமப்பட்டனர். மேலும் சபாபதிபுரம் தெரு, ஜீவா நகரில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றது. தெப்பக் குளத்தெருவில் கடந்த ஒரு வாரமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு அதன் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. நேற்று காலை பெய்த மழையில் கழிவுநீரும் சேர்ந்து சாலையில் ஓடியதால் அந்த வழியாக சென்றவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைப்பிடித்தபடி நடந்து சென்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: