அனைத்து பேருந்துகளும் புதுக்கோட்டைக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

தூத்துக்குடி, மே 3: அனைத்து பேருந்துகளும் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை பகுதியை சுற்றி சுமார் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் என்று ஏராளமானோர் தினமும் பல்வேறு வேலை நிமித்தமாக புதுக்கோட்டை வந்து செல்கின்றனர். முன்பு திருநெல்வேலி -தூத்துக்குடி இடையே இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் புதுக்கோட்டை பழைய பாலம் வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சென்றன. ஊருக்கு வெளியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு பாயிண்ட் டு பாயிண்ட் என்கிற இடைநில்லா பேருந்துகள் தவிர மற்ற பேருந்துகள் அனைத்தும் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து சென்றன.

ஆனால் தற்போது தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வந்த பிறகு திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் எந்த பேருந்துகளும் புதுக்கோட்டை ஊருக்குள் வருவதில்லை. பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்லும் வகையில் முறையான வசதிகள் செய்யப்படவில்லை. தூத்துக்குடியில் இருந்து நெல்லை, வைகுண்டம், சாயர்புரம் உள்ளிட்ட வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் ஊருக்குள் வந்து செல்கின்றன. ஆனால் திருநெல்வேலி, வைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி வரும் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்வதில்லை. நெல்லை, வைகுண்டத்தில் இருந்து வரும் பேருந்துகள் யூனியன் ஆபீஸ் அருகே அல்லது கீழக் கூட்டுடன்காடு செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டுவிட்டு செல்கின்றன.

நள்ளிரவிலும் இதே நிலைதான் இருந்து வருகிறது. இரவு நேரத்தில் தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் பேருந்துகளும் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்வதில்லை. நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கிவிடுவதால், ஆபத்தான முறையில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நெஞ்சாலையை கடந்து புதுக்கோட்டை ஊருக்குள் வருகின்றனர். இதனால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக புதுக்கோட்டை பழைய பாலத்தை புதுப்பிக்க வேண்டும் அல்லது அதனருகே புதிய பாலம் ஒன்றை கட்ட வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகள் சங்கத்தினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவ்வாறு புதிய பாலம் கட்டப்பட்டால் அந்த வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து அங்கிருந்து சாயர்புரம், வைகுண்டம் மற்றும் திருநெல்வேலி வழித்தடங்களுக்கு பேருந்துகள் சென்று வர வசதியாக இருக்கும். இந்த திட்டம் நிறைவேறும் வரை தூத்துக்குடியில் இருந்து வரும் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து முருகன் கோயில் வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து அங்கிருந்து சாயர்புரம், வைகுண்டம் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வரும்படி இயக்க வேண்டும்.

அதுபோல் திருநெல்வேலி, வைகுண்டம் போன்ற பகுதிகளில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் பேருந்துகள் புதிய மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் வந்து, முருகன் கோயில் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து, இடதுபுறமாக திரும்பி சற்று தூரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று, வலது புறமாக திரும்பி தூத்துக்குடி நோக்கி செல்லும்படி செய்ய வேண்டும். தற்காலிகமாக இந்த முறையில் பேருந்துகளை இயக்கினால் மட்டுமே அனைத்து பேருந்துகளும் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்ல முடியும். பழைய பாலப் பகுதியில் புதிய பாலம் கட்டும்வரை இந்த முறையை பின்பற்ற வேண்டுமென புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் பீட்டர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அனைத்து பேருந்துகளும் புதுக்கோட்டைக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: