தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கான முன்னேற்பாடு பணி ஆய்வு

தஞ்சை, நவ. 22: தஞ்சை பெரிய கோயிலில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோaயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் 1997ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் 23 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. தொல்லியில் துறை சார்பில் பெரிய கோயிலில் உள்ள கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி, புல்வெளி சீரமைப்பு, கல்தளம் பதிக்கும் பணி, கோயில் வளாகத்தில் சிதிலமடைந்த தரைதளம் சீரமைக்கும் பணி, திருச்சுற்று மண்டபங்கள் சீரமைக்கும் பணி, பெரிய கோயில் விமான கோபுரம் சுத்தப்படுத்தும் பணி, முருகன் சன்னதியில் உள்ள கோபுரம், விநாயகர் கோபுரம் சுத்தப்படுத்தப்பட்டன. இதர பணிகளும் நடந்து வருகின்றன.

தற்போது பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் வரும் 29ம் தேதி பாலாலய யாகசாலை பந்தல் அமைக்கும் பணி நடந்தது. டிசம்பர் 2ம் தேதி பாலாலயம் நடக்கிறது. அதன்பின்னர் பெருவுடையார், பெரியநாயகி மற்றும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் நடராஜர் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பர். அதைதொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெறும் வரை மூலவர் சுவாமிகள் முன்பாக திரையிடப்படும். இந்நிலையில் நேற்று காலை பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது யாகசாலை அமைக்கப்படும் இடம், பொதுமக்கள் கோயிலுக்குள் வந்து செல்வதற்கான பாதைகள், முக்கிய பிரமுகர்கள் வரும் வழி, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். அப்போது கோயிலை சுற்றி வலம் வந்து செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெறும் பூங்கா பணிகள் மற்றும் சத்திரம் நிர்வாகத்துக்கு உட்பட்ட தங்கும் விடுதிகள், பழைய கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

Related Stories:

>