குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டிய டிராக்டர் சிறைபிடிப்பு

பெரும்புதூர், நவ.19: பெரும்புதூர் பேரூராட்சி பக்தவச்சலம் நகர், சீக் காலனி ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். தற்போது பெரும்புதூர் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளை பக்தவச்சலம் நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் கொட்டி எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு, கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டு கடும் அவதியடைந்து வருகின்றனர்.பக்தவத்சலம் நகரில் குப்பை கொட்ட வேண்டாம் என பெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பெரும்புதூர் பேரூராட்சி ஊழியர்கள், டிராக்டர் மூலம் குப்பைகளை கொண்டு வந்து, பக்தவச்சலம் நகரில் கொட்ட முயன்றனர், இதை பார்த்த அப்பகுதி மக்கள், டிராக்டர் மற்றும் ஊழியர்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து பேரூராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்களிடம், பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின், அப்பகுதியில் குப்பை கொட்ட மாட்டோம் என கூறினர். பின்னர், கொட்ட வந்த குப்பையை, டிராக்டருடன் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பெரும்புதூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தினமும், கடைகள் மற்றும் குடியிருப்பு வீடுகளில் இருந்து டன் கணக்கில்  குப்பை சேகரிக்கபடுகிறது. அந்த குப்பையை உரமாக மாற்ற, பெரும்புதூர் - ராமாபுரம் செல்லும் சாலையில் நகர்புற உள்ளாட்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹4.44 கோடியில் 10 ஏக்கரி திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டதை செயல்படுத்தவில்லை. சேகரிக்கப்படும் குப்பையை பக்தவச்சலம் நகரில் கொட்டி எரிக்கின்றனர். இதனால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற பேரூராட்சி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: