50 ஆண்டுகளாக சுற்றுச்சுவர் இல்லாததால் கசமுசா பகுதியாக மாறிய அரசு பள்ளி வளாகம்

செய்யூர், நவ. 12: சித்தாமூர் ஒன்றியம் நைனார்குப்பம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறது. இங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி துவங்கப்பட் நாள் முதல், பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கவில்லை.இதனால், இரவு நேரம் மற்றும் விடுமுறை நாட்களில், இப்பள்ளி வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. இங்கு வரும் மர்மநபர்கள், இலவச மது அருந்தும் பாராகவும், கஞ்சா குடிப்பது, பாலியல் உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.கூட்டமாக அமர்ந்து மது அருந்தும்போது, அவர்களுக்கு போதை தலைக்கேறியதும், அந்த இடம் போர்க்களமாக மாறிவிடுகிறது. இதனால், பெண்கள் அவ்வழியாக செல்ல கடும் அச்சமடைந்துள்ளனர். மேலும், குடிமகன்கள் வீசி செல்லும் மதுபான பாட்டில்கள், உணவு பொருட்களால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதில் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்ள பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். பல கிராமசபை கூட்டத்திலும், இதுகுறித்து பலமுறை தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. ஆனால், இதுவரையில் அதற்கான நடவடிக்கையை கல்வித்துறை அதிகாரிகள் எடுக்கவில்லை என கிராம மக்கள் அதிருப்தியுடன் கூறுகின்றனர். அதேநேரத்தில், பள்ளி வளாகத்தில் செடி கொடிகள் படர்ந்துள்ளதால், அங்கு பாம்பு உள்பட பல்வேறு விஷப்பூச்சிகளும் உலா வருகின்றன. இதனால்,  இடைவேளை நேரங்களில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாட அச்சமடைந்துள்னர். மாணவர்களுக்கான கழிப்பறைகளும் இல்லாததால் மாணவ, மாணவிகள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம், அரசு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி.  குற்ற சம்பவங்களை தடுக்க பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். இரவு நேரத்தில் போலீசார் ரோந்து சென்று, சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: