அம்மாபட்டியில் பீதியை ஏற்படுத்தும் திறந்த வெளி கிணறு

போடி, நவ. 5: போடி அருகே அம்மாபட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் ஆபத்தான நிலையில் திறந்த வெளியில் உள்ள பயன்படுத்தப்படாத கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.போடி அருகே  அம்மாபட்டி ஊராட்சியில் சுமார் 7 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியிலிருக்கும் உட்கிடை கிராமமான அம்மாபட்டி கிழக்கு தெருவில் மாரியம்மன் கோயில் உள்ளது.சின்னமனூர் செல்லும் இச்சாலையில் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. ஏராளமான குடியிருப்புகளை கொண்டிருப்பதால், மக்கள் நடமாட்டமும் கூடுதலாக உள்ளது.இந்த சாலையில் கோயிலுக்கு அருகிலேயே விவசாயத்திற்காக தோண்டப்பட்ட கிணறு பயன்பாடின்றி  கருவேல மரங்களுக்கு பின் உள்ளது. பயன்பாடற்ற இந்த கிணற்றில் கிராம மக்கள் குப்பைகள் முழுவதும் கொட்டி குவித்து வருகின்றனர்.  மேலும் 100 அடி ஆழ கிணறு குப்பை கொட்டி குவித்துள்ள மேட்டால் 60 அடியாக ஆழம் குறைந்துள்ளது.

இந்நிலையில்  கிணற்றை ஓட்டி செல்லும் சிமெண்ட் சாலையும், சேதமடைந்திருப்பதால் கிணறும் சாலையும் ஒரே மட்டமாக இருப்பதால் வாகனங்களில் வருபவர்களுக்கு கிணறு இருப்பது தெரியாத நிலை உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் விளையாடுகிற குழந்தைகளும் கிணற்றில் தவறி விழுந்து விடும் அபாயமும் உள்ளது.எனவே, பொதுமக்களின் நலன் கருதி கிணற்றைச் சுற்றி தடுப்புச் சுவரோ,  இரும்பு கம்பி வேலியோ அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: