விருத்தாசலம் அரசு பெண்கள் பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரால் மாணவிகள் அவதி

விருத்தாசலம், நவ. 1: விருத்தாசலம்-பெண்ணாடம் சாலையில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் மின்சாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் இன்றி மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், மழைநீர் வெளியேறுவதற்கான வசதிகள் எதுவும் இல்லாததால் கடந்த சில நாட்களாக பெய்த மழை நீர் பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் மாணவிகள் தங்கள் வகுப்பறைகளுக்கு செல்ல முடியாமல் தண்ணீரில் நனைந்து கொண்டு சென்று வருகின்றனர். மேலும் பல நாட்களாக தேங்கியுள்ள மழை நீரால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிறது.  கொசுக்கடி காரணமாக கடந்த சில நாட்களாக பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் காய்ச்சல், தலைவலி போன்ற நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், மழை நீர் அதிகமாகி பள்ளி வளாகத்தில் தேங்கிநிற்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.  பள்ளியில் தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: