கொளப்பாக்கம் - ஊனமாஞ்சேரி சாலையில் கால்வாய் இல்லாததால் குளம்போல் தேங்கும் மழைநீர்

கூடுவாஞ்சேரி, அக்.31: கொளப்பாக்கம் - ஊனமாஞ்சேரி சாலையோரத்தில், முறையான கால்வாய் வசதி இல்லாததால், சாலையில் மழைநீர் தேங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊனமாஞ்சேரி ஊராட்சியில் ஊனமாஞ்சேரி, கொளப்பாக்கம், சமத்துவபுரம், போலீஸ் அகாடமி, வசந்தாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இதில், ஊனமாஞ்சேரியில் இருந்து கொளப்பாக்கம் செல்லும் 2 கிமீ தூரம் கொண்ட சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும், குழியுமாகவும், மழை காலத்தில் சேறும் சகதியுமாகவும் காணப்படுகிறது. மேலும், இந்த சாலையின் இருபுறமும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. ஆனால், இச்சாலையில் முறையான கால்வாய் வசதி இல்லை. இதனால், தற்போது பெய்து வரும் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையிலேயே தேங்குகிறது.

இதனால், ஊனமாஞ்சேரியில் இருந்து கொளப்பாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதியடைகின்றனர். மேலும், சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், சென்னை தி.நகரில் இருந்து ஊனமாஞ்சேரிக்கு இயக்கப்பட்ட மாநகரப்பேருந்து சரிவர இயங்குவதில்லை. இதனால் மாணவர்கள், வேலைக்கு சென்று வருவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, கொளப்பாக்கம் ஊனமாஞ்சேரி சாலையில் முறையான கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: