களைகட்டிய தீபாவளி வியாபாரம் தேனியை நோக்கி வரும் கிராம மக்களால் நெரிசல்

தேனி, அக். 25:  தீபாவளிக்கு பொருட்கள் வாங்க தேனியை நோக்கி வரும் பொதுமக்களால் நகரில் நெரிசல் அதிகளவில் உள்ளது. சிறு, சாலையோர வியாபாரிகளுக்கு உதவும் வகையில் இரவில் மழை பெய்தாலும், பகலில் லேசான வெயில் இருப்பதால் வியாபாரிகள் உற்சாகத்தில் உள்ளனர்.தீபாவளிக்கு பொருட்கள் வாங்க தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்கள், நகர் பகுதிகளில் இருந்தும் மக்கள் தேனிக்கு வருகின்றனர். இதனால் பஸ்களில் நெரிசல் அதிகளவு உள்ளது. குறிப்பாக, கிராமங்களுக்கு சென்று வரும் டவுன் பஸ்கள் நெரிசலில் திணறுகின்றன. மக்கள் பொருட்கள் வாங்க வசதியாக தேனியில் காலையில் வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே கடைகளை திறந்து விடுகின்றனர். இரவு 11 மணி வரை வியாபாரம் நடக்கிறது.

 நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை ஓரங்களில் சிறுகடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்னறர். இவர்களுக்கு உதவும் வகையில் கடந்த மூன்று நாட்களாகவே பகலில் லேசான வெயிலுடன் கூடிய இதமான பருவநிலை நிலவுகிறது. இரவில் சாரலுடன் கூடிய மழை பெய்கிறது. வருண பகவானும் சிறு வியாபாரிகள் மீது கருணை வைத்துள்ளான் என சிறு வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் வியாபாரம் செய்து வருகின்றனர். தவிர பெரியகடைகளை வைத்துள்ள வியாபாரிகள் தங்கள் கடைகளின் முன்பாக சிறு வியாபாரிகள் கடை போட அனுமதியும் வழங்கி தங்களது பெருந்தன்மையினை வெளிப்படுத்தியுள்ளனர்.

Related Stories: