குஜிலியம்பாறை தபால் அலுவலகத்தில் 2 மணிநேரம் மட்டும் ஓடும் ஜெனரேட்டர்

குஜிலியம்பாறை, அக்.24: குஜிலியம்பாறை தபால் நிலையத்தில் மின்தடை நேரத்தில் பழுதடைந்த ஜெனரேட்டரை இரண்டு மணி நேரம் மட்டுமே இயக்கப்படுவதால், தபால் அலுவலக பணிகள் முற்றிலும் முடங்கி போய் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.  குஜிலியம்பாறையில் உள்ள தபால் நிலையம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. தபால் அலுவலக பணிகளில் தொய்வு ஏற்படாத வகையிலும், தபால் அலுவலக சேவைகள் பொதுமக்களுக்கு பாதிக்காத வகையிலும் தொடர் மின்வசதி கிடைத்திட குஜிலியம்பாறை தபால் நிலையத்தில் கடந்த 2013ம் ஆண்டு ரூ.4 லட்சம் செலவில் புதிய ஜெனரேட்டர் வசதி செய்து தரப்பட்டது. தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வந்த ஜெனரேட்டர் போதிய பராமரிப்பு இன்றி, தற்போது இரண்டு மணி நேரத்திற்கு மேல் இயக்க முடியாத நிலையில் பழுதடைந்து உள்ளது. இதனால் தபால் அலுவலகத்தில் மாத வருவாய் திட்டம், சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்பு தொகை, மாதாந்திர வைப்பு தொகை, மாதாந்திர வருவாய் திட்டம், மணியார்டர், டெலிபோன் பில், மின் கட்டண பில் உள்ளிட்ட பணிகள் முற்றிலும் முடங்கி போய் உள்ளது.

இந்நிலையில் கோவிலூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக குஜிலியம்பாறையில் நேற்று முன்தினம் மின்தடை ஏற்பட்டது. அப்போது குஜிலியம்பாறை தபால் அலுவலகத்திற்கு சென்ற மக்கள் பதிவு தபால் அனுப்ப முடியாமல் திரும்பி சென்றனர். இதுமட்டுமின்றி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், வெளியூர்களுக்கு பதிவு பார்சல் அனுப்ப சென்றவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். ஜெனரேட்டர் வசதி இருந்தும் ஏன் தபால் அலுவலகம் செயல்பாடு இல்லை என பொதுமக்கள் கேட்கின்றனர். அதற்கு ஜெனரேட்டர் பழுதடைந்த நிலையில் உள்ளதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் இயக்க முடியாது. பெட்ரோல் மூலம் ஜெனரேட்டர் இயக்கப்படுவதால், இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் தான் இயக்குவதற்கு பெட்ரோல் அலவன்ஸ் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் மின்தடை நேரத்தில் ஜெனரேட்டரை முழு நேரமும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா இயங்கி வரும் நிலையில், இங்குள்ள தபால் அலுவலகத்தில் மின்தடை நேரத்தில் பணிகள் முடங்கி போய் உள்ளது மக்களை கவலையடைய செய்கிறது. எனவே மின்தடை நேரத்தில் தபால் அலுவலக பணிகள் பாதிக்காத வகையில், முழுநேர ஜெனரேட்டர் வசதி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: