நிலக்கோட்டை அருகே கூலித்தொழிலாளி கொலையில் 6 பேர் கைது

நிலக்கோட்டை, மே 10: நிலக்கோட்டை அருகே, கூலித்தொழிலாளி கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். நிலக்கோட்டை அடுத்த, கரியாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தில், இரு தரப்பு இளைஞர்களுக்கு இடையே கடந்த 6ம் தேதி இரவு முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது. இதில், இருதரப்பை சேர்ந்த 2 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இருதரப்பு மோதலால் கரியாம்பட்டி, நடுப்பட்டியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், அன்றிரவு நடுப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஆண்டார் (50), வீட்டு முன்பு படுத்திருந்தபோது மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனால், பதற்றம் ஏற்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க நிலக்கோட்டை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

போலீசார் விசாரணையில், ‘நடுப்பட்டியைச் சேர்ந்தவர்களை மிரட்ட வேண்டும் என கரியாம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களுடன் நடுப்பட்டியில் வலம் வந்துள்ளனர். அப்போது வீட்டு வாசலில் படுத்திருந்த ஆண்டார், ‘நீங்கள் யார் என்று விசாரித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவரை வெட்டிக் கொன்றது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட ஆண்டாருக்கு மனைவி நாகம்மாள் (48), மகள்கள் பாண்டியம்மாள் (25), செல்லப்பாண்டி (23), மகன் தங்கப்பாண்டி (21) ஆகியோர் உள்ளனர். கொலையாளிகளை கைது செய்யக்கோரி ஆண்டார் உறவினர்கள், தமிழ் புலிகள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ஆண்டார் கொலை வழக்கு தொடர்பாக கரியாம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (36), விக்னேஸ்வர் (22), கார்த்திக் (19) ஆகிய மூன்று பேரை, சாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், நிலக்கோட்டை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில், கடந்த 6ம் தேதி கைது செய்யப்பட்ட கரியாம்பட்டியை சேர்ந்த சக்திவேல், மருதை, லோகநாதன் ஆகிய 3 பேரும் சேர்க்கப்பட்டு, 6 பேரையும் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

The post நிலக்கோட்டை அருகே கூலித்தொழிலாளி கொலையில் 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: