திண்டுக்கல்லில் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி: 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திண்டுக்கல், மே 10: திண்டுக்கல்லில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட எஸ்பி பிரதீப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்தில் பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய “நான் முதல்வன்“ என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ. மாணவிகளின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும். அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்பது குறித்தும், தமிழில் தனித்திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும். நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இவற்றைத் தவிர, மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மேலும் உயர்கல்வி தொடர்பாக மாணவர்களை ஊக்குவித்தல் மற்றும் பல்வேறு படிப்புகள் குறித்தும் விளக்கமளிக்கப்படுகிறது. முன்னோடி வங்கி சார்பில் கல்விக் கடன் உதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் உயர்கல்வி படிக்க தேவையான விடுதி வசதிகள் குறித்தும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மூவாலுார் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் குறித்தும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்படுகிறது.
பொறியியல், மருத்துவம், வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணாக்கர்கள் கல்விக் கடனுதவி பெற்று பயன்பெறலாம். தகுதியுள்ள அனைவருக்கும் கடனுதவி கிடைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.

மேலும், மாணவ, மாணவிகள் கடன் பெறுவதற்கென உள்ள இணைதளம் www.vidyalakshmi.co.in விண்ணப்பித்து கல்விக் கடன் பெறலாம். கடந்த கல்வி ஆண்டில் மாவட்டம் முழுவதும் பல்வேறு வங்கிகள் சார்பில் 300க்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு சுமார் 18 கோடி ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இங்கு தெரிவிக்கப்படும் கருத்துக்களை மாணவ, மாணவிகள் நன்கு கவனித்து தங்கள் உயர்கல்விக்கு தேவையான அறிவுரைகளை பயன்படுத்தி, உயர்கல்வி கற்று தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், என கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில், அண்ணா பல்கலைக்கழகம், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் சார்பில் ஐடிஐ, பாலிடெக்னிக், பட்டப்படிப்பு, தொழில்படிப்புகள் உள்ளிட்ட உயர்கல்வி வழிகாட்டல் தொடர்பாக 15க்கும் அதிகமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த அரங்குகளை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, என்னென்ன படிப்புகள், எந்தெந்த கல்லுாரிகளில் உள்ளன, அந்த படிப்புகளில் சேரும் வழிமுறைகளை கேட்டறிந்து கொண்டனர். பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார், நத்தம் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 2,100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், திண்டுக்கல் ஆர்.டி.ஒ.,சக்திவேல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பிரபாவதி, ஜி.டி.என்., கல்லுாரி தாளாளர் ரத்தினம், மாவட்ட முன்னோடி வங்கி மண்டல மேலாளர் அருணாச்சலம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திண்டுக்கல்லில் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி: 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: