சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பதால் மாமல்லபுரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

சென்னை, அக். 15: மாமல்லபுரத்திற்கு இரு தலைவர்கள் வருகைக்கு பின்பு, சுற்றுலா பயணிகள் தொடர்ந்து படையெடுத்து வருவதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், புல்தரைகள் தண்ணீர் இன்றி காய்ந்தும், சுற்றுலாப் பயணிகள் புல்தரை அமர்வதாலும் சேதமடைந்து வருவதை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். பிரதமர் மோடி - சீன  அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரம் வந்து சென்றதையடுத்து நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். அதேபோல், நேற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வேன், கார், பைக் ஆகியவைகளில் வந்ததால் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. இதற்கு காரணம், இரு தலைவர்கள் வந்ததையொட்டி, மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த அழகிய மின் விளக்கின் தோற்றம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதனால், இந்த எழில் மிகு தோற்றத்தை பார்ப்பதற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். ஆனால், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வந்து சென்ற பிறகு அந்த அழகிய மின் விளக்குகளை அணைத்து விட்டனர்.

இதனால், சுற்றுலாப் பயணிகள் மாலை 6 மணிக்கு மேல் எந்த புராதான சின்னங்களையும் பார்க்க முடியாத அளவு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. புராதான சின்னங்களை பார்க்க முடியாமல் ஏமாந்து, சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர். அதேப்போல், சுற்றுலாப் பயணிகள் போட்டு விட்டு சென்ற குப்பைகள் அங்கங்கே சிதறிக்கிடக்கிறது. புராதான சின்னங்கள் உள்ள இடங்களிலும் நகரின் மற்ற பகுதியிலும் குப்பைகளை போடுவதற்கு குப்பை தொட்டிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் குப்பையை ஆங்காங்கே போட்டு விடுகின்றனர். தலைவர்கள் வருகையொட்டி பல லட்சம் ரூபாய் செலவில் வெண்ணய் உருண்டை கல் மற்றும் கடற்கரைக் கோயில் உள்ளிட்ட இடங்களில்    பெங்களூரில் இருந்து வரவழைக்கப்பட்ட புல் தரைகள் அமைக்கப்பட்டன. இதை சுற்றுலாப் பயணிகள் மிதித்தும் அதன் மீது  நடந்து செல்வதால் தண்ணீர் இல்லாமல் காய்ந்து உள்ளது. எனவே, ‘தினமும் காலை நேரத்தில் அந்த புல் தரைக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Related Stories: