குடிமராமத்து பணியில் பல லட்சம் முறைகேடு? பேரூராட்சி அலுவலகம் முற்றுகை இளையான்குடி மக்கள் ஆவேசம்

இளையான்குடி, அக்.10: இளையான்குடியில் குடிமராமத்து பணியில் பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக பேரூராட்சி ஆபிசை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இளையான்குடி பகுதியில் நிலத்தடிநீரை சேமிக்கும் நோக்கத்துடன் பொட்டகண்மாய், பண்டுவன் ஊரணி, எலுமிச்சை ஊரணி, மமதா ஊரணி, சாலையூரணி மற்றும் நெசவுப்பட்டறை ஊரணி ஆகியற்றை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்றது. கரைகளுக்கு போடப்பட்டு மீதமுள்ள மண் தனியார் கல்லூரி, பள்ளி, செங்கல் சேம்பர் ஆகிய இடங்களுக்கு பல லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. விற்பனை செய்யும் மண் குறித்து அப்போதே மக்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, விற்பனை செய்த தொகையை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு செலவு செய்ய உள்ளோம் என தூர்வாரும் குழுவினர் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் சமாதானமாகினர். இந்நிலையில் தூர்வாரும் பணிக்காக பேரூராட்சி ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேரூராட்சி நிதி ஒதுக்கும்போது, எதற்காக மண்ணை விற்று செலவு செய்தார்கள் என்ற தகவல் வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த இளையான்குடி மக்கள் நேற்று இளையான்குடி பேரூராட்சி ஆபீசை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மஜக நகரச் செயலாளர் உமர்கத்தாப், காங்கிரஸ் சிறுபான்மை தலைவர் அம்பலம் ராவுத்தர் நெய்னார் கூறுகையில், தூர்வாரும்போது மண் பல லட்சத்திற்கு விற்கப்பட்டது. விற்பனை செய்த தொகையை வைத்து செலவு செய்கிறோம் என கூறிவிட்டு, தற்போது பேரூராட்சி நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மோசடி செய்யவுள்ளனர். இந்த தொகையை வைத்து அடிப்படை வசதிகள் செய்யலாம். அதிகாரிகளின் உடந்தையுடன் முறைகேடாக நிதி செலவு செய்யப்படுகிறது என்றனர்

Related Stories: