அரசு பள்ளியில் மனநல ஆலோசனை முகாம்

ஈரோடு, அக். 10: உலக மனநல தினத்தையொட்டி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, குழந்தைகள் நலக்குழுமம் சார்பில் வளர் இளம் பருவக் குழந்தைகளுக்கான மனநல ஆலோசனை குழு முகாம் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பள்ளி தலைமையாசிரியை சுகந்தி வரவேற்றார். குழந்தைகள் நலக்குழு தலைவர் அசோக், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி லட்சுமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி கூறுகையில், `அக்டோபர் மாதம் 10ம் தேதி (இன்று) உலக மன நல தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, எங்கள் பள்ளியில் மன நல ஆலோசனை குழு துவங்கி உள்ளது. தலைமை ஆசிரியரை தலைவராக கொண்டு உதவி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 11 பேர் குழுவில் இருப்பர்.

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு மன நல ஆலோசனை தனிப்பட்ட முறையில் வழங்கப்படும். இந்த குழுவின் முக்கிய நோக்கம், மாணவிகளின் உடல் நலம், கல்வி நிலையை கண்காணிப்பது, அவரது  நடவடிக்கையில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்து வகுப்பு ஆசிரியர்கள் அறிவுரை வழங்குவார். பின்னர், குழுவுக்கு தகவல் அளிப்பார். குழுவிலும் தீர்க்க முடியாத பிரச்னைகள் மன நல டாக்டர்கள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’

என்றார்.

Related Stories: