ஆம்பூர் அருகே விபத்து சாலை தடுப்பு சுவரில் பைக் மோதி டாக்டர் பலி உடன் சென்ற பெண் ஊழியர் படுகாயம்

ஆம்பூர், அக். 4: ஆம்பூர் அருகே சாலை தடுப்பு சுவரில் பைக் மோதிய விபத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பணிபுரியும் பெண் ஊழியர் படுகாயம் அடைந்தார்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த வடக்குநாடு பகுதியை சேர்ந்தவர் சிங். இவரது மகன் பெனடிக் பிரபு(27). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நியூராலஜி பிரிவில் டாக்டராக பணி புரிந்து வந்தார். அதே மருத்துவமனையில் அதே பிரிவில் கேரள மாநிலம், கோட்டயம் பகுதியை சேர்ந்த ஜோஸ் ரேக்கர் மகள் ஜூலியா ஜோஸ்(24) என்பவர் டியூட்டராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், பெனடிக் பிரபுவும், ஜூலியா ஜோசும் பைக்கில் நேற்று காலை வேலூரில் இருந்து வேலூர் மாவட்டம் ஆம்பூர் நோக்கி சென்றனர். மாதனூர் அடுத்த வெங்கிலி அருகே காலை 7.40 மணியளவில் சென்றபோது பைக் திடீரென நிலைதடுமாறி சாலை தடுப்பு சுவரில் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர்.

Advertising
Advertising

தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து இருவரையும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், பெனடிக் பிரபு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஜூலியா ஜோசு மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: