ஐஸ் கிரீம் தயாரித்த வாலிபர் காஸ் சிலிண்டர் வெடித்து படுகாயம்

 

வேலூர், ஏப்.29: வேலூரில் ஐஸ் கிரீம் தயாரித்தபோது காஸ் சிலிண்டர் வெடித்து வடமாநில வாலிபர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் காகிதப்பட்டறை மேலாண்டை தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது வீட்டில் உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தை சேர்ந்த புரூகான்(24) என்பவர் கடந்த 3 மாதமாக தங்கி குல்பி, ஐஸ் கிரீம் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவருடன் மற்றொரு வாலிபரும் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு வாலிபர்கள் 2 பேரும் காஸ் அடுப்பில் ஐஸ்கிரீம் தயாரித்துள்ளனர். வேலை முடிந்து காஸ் சிலிண்டரை சரியாக அணைக்காமல் தூங்கிவிட்டனர்.

இதனால் சிலிண்டரில் இருந்து காஸ் கசிந்து அறை முழுவதும் பரவியுள்ளது. நேற்று காலை எழுந்த புரூகான், அறை முழுவதும் காஸ் பரவியுள்ளது அறியாமல் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது காஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் புரூகானின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து புரூகான் மீது பற்றிய தீயை அணைத்தனர். பின்னர் படுகாயமடைந்த அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்தபோது புரூகானுடன் தங்கியிருந்த மற்றொரு வாலிபர் வெளியே இருந்ததால் அவர் தப்பினார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ஐஸ் கிரீம் தயாரித்த வாலிபர் காஸ் சிலிண்டர் வெடித்து படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: