சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? அரசு மருத்துவக்கல்லூரி டீன் விளக்கம் வேலூர் உட்பட 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

வேலூர், ஏப்.28: வேலூர் உட்பட 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும், அதனால் வட தமிழக உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை அதிகமாக இருக்கும். அதனால் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட 19 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை வெப்பத்தால் ஏற்படும் விளைவுகளில் இருந்து பாதுகாக்கும் முறைகள் குறித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பாப்பாத்தி கூறியதாவது: அதிகளவு நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவு நீர் பருகவேண்டும்.

சிறுநீரானது வெளிர்மஞ்சள் நிறுத்தில் வெளியேறும் அளவில் தேவையான நீர் பருகவேண்டும். சூடான பானங்களை பருகுவதை தவிர்க்கவும். மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசி கஞ்சி, இளநீர், உப்பு கலந்து எலுமிச்சை, ஓஆர்எஸ் உப்பு கரைசலை பருகலாம். வெளியே செல்லும்போது குடிநீர் பாட்டில் எடுத்து செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் போது, தொப்பி அல்லது கண்ணாடி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான தளர்ந்த காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணியவேண்டும். திறந்தவெளியில் வேலை செய்யும்போது தலையில் பருத்தி துணியில் துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். வீடுகளில் குளிர்ந்த காற்றோட்டம் உள்ளவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சூரிய ஒளி நேராகப்படும் ஜன்னல் மற்றும் கதவுகள் ஆகியவற்றை ஸ்கிரீன்களால் மூட வேண்டும். இரவு நேரங்களில குளிர்ந்த காற்று வருமாறு ஜன்னல்களை திறந்து வைத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? அரசு மருத்துவக்கல்லூரி டீன் விளக்கம் வேலூர் உட்பட 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: