மயிலாடும்பாறை அருகே தார்ச்சாலை பணிகள் தொடக்கம்

வருசநாடு, செப்.11: மயிலாடும்பாறை அருகே தினகரன் செய்தி எதிரொலியாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மயிலாடும்பாறை அருகே பொன்னன்படுகை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தார்ச் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. இது குறித்து நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தார்ச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்ட பணியாக கிராவல் அடித்து அரைக்கும் பணியும் அதனை தொடர்ந்து ரோலரில் ஜல்லி கற்களை அரைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலை பணியை மயிலாடும்பாறை ஒன்றிய ஆணையாளர் திருப்பதிவாசகன், உதவி செயற்பொறியாளர் அனிதா, மயிலாடும்பாறை பொறியாளர் முகமதுஹாரீஸ், மயிலாடும்பாறை தொழில்நுட்பஉதவியாளர் அழகுராஜா, அரசு ஒப்பந்ததாரர் முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தார் சாலை பணி அமைப்பதற்காக ரூ.60 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி விரைந்து நடைபெற்று முடியும். பொதுமக்களுக்கு இடையூறு ஏதும் ஏற்படாத விதமாக சாலை பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: