விருத்தாசலத்தில் குறை தீர்ப்பு கூட்டம் மனுக்கள் மீது நடவடிக்கை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

விருத்தாசலம், ஜூலை 24: விருத்தாசலம் கோட்ட அளவிலான சிறப்பு குறை தீர்க்கும் நாள் மற்றும் ஆய்வுக்கூட்டம் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாந்த், தாசில்தார் கவியரசு முன்னிலை வகித்தனர்.  மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். இதில், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் கார்மாங்குடி வெங்டேசன் தலைமையில் விவசாயிகள் ஆட்சியரிடம் விடுத்த வேண்டுகோளில், விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட வயலூரில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நெய்வேலி என்எல்சி உபரிநீரை கொண்டு வருவதற்காக பலமுறை மனு அளித்ததன் பேரில், அந்த திட்டம் செயல்படுத்துவதற்கான சூழ்நிலை இருந்தும் தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த ஏரியை நேரில் வந்து ஆய்வு செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து சார் ஆட்சியர், தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினருடன் ஆட்சியர் சென்று ஏரியை பார்வையிட்டார். என்எல்சி மற்றும் வருவாய்த்துறையிடம் கூறி விரைவில் விவசாயிகள் பயனடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து தீயணைப்பு துறை அலுவலகம் பின்புறம் உள்ள நாச்சியார்குளம் தூர்வாரும் பணியை ஆட்சியர் பார்வையிட்டார். பின்பு குளத்தில் அருகில் மரக்கன்றுகளை நட்டார். வள்ளலார் குடில் இளையராஜா, முன்னாள் கவுன்சிலர் தங்க அன்பழகன், அறிவுடைநம்பி, மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: