நாற்றங்கால் தயாரிக்கும் பணி தேனியில் மும்முரம் விதை நெல் தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதி

தேனி, ஜூன் 25:  தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, இரண்டு நாட்களாக சாரல் பெய்து வருகிறது. நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள விவசாயிகள் விதை நெல் தட்டுப்பாடு காரணமாக சிரமப்பட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் முதல்போக நெல் சாகுபடி நடக்கும். வழக்கமாக ஜூன் முதல் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் கடந்த சில ஆண்டுகளாக ஜூன் 8 ம் தேதிக்கு மேல் 13ம் தேதிக்குள் திறக்கப்பட்டு வந்தது. நடப்பு ஆண்டு ஜூன் 23ம் தேதி தான் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. தற்போது குமுளியில் இருந்து கோட்டயம் வரை கேரளாவில் பருவமழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக சாரல் பெய்கிறது.

ஜூன் 28 ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி வரை தேனி மாவட்டத்தில் நல்ல மழை கிடைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இருப்பினும் குமுளி, தேக்கடி மற்றும் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்கி உள்ளதால் நாளை அல்லது நாளை மறுநாள் முதல் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். இதனால் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் முல்லை பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் அப்பாஸ் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் நாற்றாங்கால் தயாரிக்க தேவையான உழவு பணிகளை முடித்து விவசாயிகள் தயாராக உள்ளனர். ஐ.ஆர் 51, நெல் விதை உட்பட 110 நாளில் அறுவடையாக கூடிய மூன்று வகையான நெல் வகைகளை விதைக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

சான்று பெற்ற விதைகளை மட்டுமே விதைக்க வேண்டும். வெளி மார்க்கெட்டில் விதை வாங்க வேண்டாம். அரசு கொள்முதல் மையங்களில் விதை வாங்கி பயன்படுத்துங்கள் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி வருகின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு தேவையான விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இல்லை. விதை நெல் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மொத்தம் மாவட்டத்திற்கு 310 டன் நெல் விதை தேவைப்படும். இவ்வளவும் வேளாண்மைத்துறையால் வழங்க முடியாது.

மொத்தம் தேவைப்படும் விதை நெல்லில் 17 சதவீதம் மட்டுமே வேளாண்மைத்துறை வழங்கும். ஆனால் தற்போது வரை இலக்கினை தாண்டி 60 டன் விதை நெல் வழங்கி உள்ளோம். இன்னும் 60 டன் விதை நெல் இருப்பு உள்ளது. எனவே விவசாயிகள் சாதாரண விதைகளை வாங்கி ஏமாற வேண்டாம். சான்று பெற்ற விதை நெல்லை மட்டும் வெளிமார்க்கெட்டில் தனியாரிடம் மிகவும் கவனமுடன் சரிபார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு கூறினர்.

Related Stories: