முறையாக குடிநீர் வாங்காத அதிகாரிகளை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

உத்திரமேரூர், ஜூன் 25: முறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் உத்திரமேரூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திரமேரூர் அடுத்த இடையம்புதூர் கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்கு, அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றி, பின்னர் பைப் லைன் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த 2 மாதங்களாக, மேற்கண்ட பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள், தண்ணீருக்காக பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும், எவ்விதநடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும், குடிநீர் தேவைக்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரவேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உத்திரமேரூர் - இடையம்புதூர் சாலையில் நேற்று திரண்டனர். அங்கு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து அதிகாரிகள் மற்றும் சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமசர பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் உத்திரமேரூர் - இடையம்புதூர் இடையே சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: