திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் நிதி உதவிக்கு விண்ணப்பிக்க முகாம் விஏஓ அலுவலகங்களில் இன்று முதல் துவக்கம்

திருவாரூர், ஜூன் 21: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. ஆயிரம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம்கள் இன்று முதல் விஏஓ அலுவலகங்களில் நடைபெறுவதாக கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிரதம மந்திரி கிஷான்சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தில் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் நிதி உதவி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனவே மாவட்டத்தில் உயர் வருவாய் பிரிவினர் மற்றும் நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்களைத் தவிர பிற விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் சேர்வதற்கு உடனடியாக கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுகளுக்கும் இத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே இதுவரையில் தங்களது தாய் மற்றும் தந்தை பெயரில் நிலங்கள் இருக்கும் விவசாயிகள் அதற்குரிய வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட பகுதியின் தாசில்தாரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து வரும் 24ம் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து இந்த திட்டத்தில் பயன் பெறலாம்.

மேலும் மாவட்டத்தில் இதற்கென சிறப்பு முகாம் இன்று (21ம் தேதி) துவங்கி வரும் 23ம் தேதி வரையில் அனைத்து விஏஓ அலுவலகங்களிலும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது. எனவே இதில் விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories: