சோழன்மாளிகையில் பயிர் காப்பீடு முறைகேடு கண்டித்து சமூக ஆர்வலர் உண்ணாவிரதம்

கும்பகோணம், ஜூன் 11: கும்பகோணம் அடுத்த அண்டக்குடையனை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தனக்கு சொந்தமான மூங்கில் மரத்தை வெட்டி விட்டு அதன் கிளைகளை அருகில் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமாக இடத்தில் போட்டார். இதனால் இடையூறு ஏற்படுகிறது என்று ராமலிங்கத்திடம் பலமுறை கூறியும் அகற்றவில்லை. இதனால் சண்முகம், மூங்கில் முட்களை தீயிட்டு கொளுத்தினார். இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் ராமலிங்கம் புகார் செய்தார். அதன்பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ராமச்சந்திரன், நாச்சியார்கோவில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி ஆகியோர் விசாரணை நடததாமல் சண்முகத்தை கைது செய்தனர். இந்த செயலை கண்டித்தும், சோழன்மாளிகை சரகத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் நடந்துள்ள முறைகேடு கண்டித்து நாச்சியார்கோவிலில் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் இருப்பதாக கடந்த 5ம் தேதி கும்பகோணம் அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான சொக்கலிங்கம் (90) என்பவர் அறிவித்து அங்கு சென்றார். போராட்டம் நடத்த வந்தவரை போலீசார் மிரட்டி தூக்கி கொண்டு வந்து வீட்டில் விட்டனர்.

மேலும் அவரது குடும்பத்தினரை அவமரியாதையாக பேசி விட்டு போலீசார் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த சொக்கலிங்கம், போலீசாரை கண்டித்து வீட்டுக்குள் கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சொக்கலிங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி சின்னைபாண்டியன் மற்றும் கட்சியினர் அவரது வீட்டுக்கு சென்றனர். இதையறிந்த கும்பகோணம் தாசில்தார் நெடுஞ்செழியன், சொக்கலிங்கம் வீட்டுக்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவர் மேல் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்ததை பேசி முடிவுக்கு கொண்டு வரப்படும். சோழன்மாளிகை சரகத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகாரளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து தொடர் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Related Stories: