தூத்துக்குடி-அருப்புக்கோட்டை ரயில்வே பாதைக்காக விளைநிலங்களில் மண் அள்ளிய 6 லாரிகள் பறிமுதல்

ஓட்டப்பிடாரம், ஜூன் 4: தூத்துக்குடி-அருப்புக்கோட்டை ரயில்வே பாதைக்காக ஓட்டப்பிடாரம் அருகே விளைநிலங்களில் இருந்து சரள் மண் அள்ளியதாக புகாரின்பேரில் 6 லாரிகளை தாசில்தார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தார். தூத்துக்குடி-அருப்புக்கோட்டை இடையே புதிய ரயில்வே பாதை அமைக்கும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில் புதியம்புத்தூர் அருகே சில்லாநத்தம் பகுதி ரோட்டில் தூத்துக்குடி சாலையை கடப்பதற்காக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியும் அதேபோல் தூத்துக்குடி-மதுரை நான்கு வழிச்சாலையை கடப்பதற்காக வாலசமுத்திரம் பகுதி அருகே மேம்பாலம் அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது. ரயில்வே மற்றும் தனியார் மின் உற்பத்தி நிறுவன பங்களிப்புடன் நடக்கும் இப்பணிகளில் வாலசமுத்திரம், சில்லாநத்தம் கிராமங்களில் விளைநிலங்களில் ஜேசிபி மூலம் சரள்மண் எடுக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் புகார் தெரிவித்தனர். மேலும்  கலெக்டரிமும் இப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மனு நீதிநாள் முகாமில் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 10 மணி அளவில் சில்லாநத்தம் மற்றும் வாலசமுத்திரம் பகுதி விளைநிலங்களில் சரள் மண் லாரிகளில் கொண்டு செல்லப்படுவதாக ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து உடனடியாக தாசில்தார் மலர்தேவன், துணை தாசில்தார் கண்ணன், விஏஓ பார்த்த சாரதி உள்ளிட்ட வருவாய் துறையினர் அங்கு வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த 6 லாரிகளை சோதனையிட்டதில் அவற்றில் எவ்வித ஆவணமும் இன்றி சரள்மண் கொண்டு செல்வது தெரியவந்தது. இதனையடுத்து அந்த லாரிகளை ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: