மயிலாடுதுறை கடைவீதியில் தேங்கிகிடக்கும் குப்பையால் துர்நாற்றம் நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

மயிலாடுதுறை, மே 25: நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஒரே குப்பை கிடங்கு ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ளது.மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நாள் ஒன்றுக்கு 30 டன்னுக்கும் அதிகமாக குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்நிலையில் குப்பையை தரம்பிரித்து நுண்உரம் தயாரிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை நகராட்சி செய்தும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் நகராட்சி ஊழியர்களும் தனியார் ஊழியர்களும் நகரத்தில் சேரும் குப்பைகளை சேகரித்துச்சென்று குப்பைக் கிடங்கில் சேர்த்து வருகின்றனர். உரிய தொழிலாளர்கள் மற்றும் வாகனங்கள் இல்லாத காரணத்தினால் தெரு ஓரமெங்கும் குப்பைகளை கொட்டிவைப்பதும் அவற்றை ஊழியர்கள் சென்று அள்ளிச்செல்வதும் வாடிக்கை. அதே போன்று மயிலாடுதுறை நரம் நாராயணபிள்ளை சந்து மகாதானத்தெரு முணை ஓரத்தில் கடந்த பல நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது, அந்தக்குப்பையில் எச்சில் இலைகளும் மொத்தமாக போடப்பட்டுள்ளதால் அதிலிருந்து கிளம்பும் துர்நாற்றம் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

ஆகவே நகராட்சி நிறுவனம் மயிலாடுதுறை நகரில் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் குப்பைகளை போர்க்கால அடிப்படையில் அனைத்து ஊழியர்களையும் ஒருசேர அழைத்துச்சென்று துப்புரவு பணிகளை செய்ய வேண்டும். அதே போன்று நகராட்சியை ஒட்டிச்செல்லும் ஆபரணச்சந்து வழியாக இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் வரை சென்ற  நிலை மாறி ஆள் நடமாட முடியாத அளவிற்கு ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது அவற்றையும் சரிசெய்து அந்தப்பாதையை போக்குவரத்திற்கு தகுந்தபடி மாற்றித்தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: