தனியார் லாட்ஜ் இடம் ஆக்கிரமிப்பு

ஈரோடு,  மே 19: தனியார் லாட்ஜ் இடத்தை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளதாக  பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு எஸ்பி.,யிடம் ஹலோ சீனியர் திட்டத்தில் புகார்  அளித்தனர். புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி  போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்  மணிக்கூண்டு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (84). இவரது மனைவி ராஜாமணி  (76). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கோவிந்தராஜ் மணிக்கூண்டு ரோட்டில்  அவரது வீட்டிற்கு அருகிலேயே அவரது பெயரில் 36 அறைகள் கொண்ட தங்கும் விடுதி  வைத்து நடத்தி வருகிறார்.

விடுதிக்கு கீழ் பகுதியில் இரண்டு கடைகளை கடந்த 5  ஆண்டுக்கு முன்பு ஈரோடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஷாஜகான் (40)  என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அவர் அங்கு ஸ்கூல் பேக் கடை வைத்து  நடத்தி வந்தார். காலப்போக்கில் அவர் தங்கும் விடுதியின் வழிகளை முழுவதுமாக  ஆக்கிரமித்து கடை வைத்து நடத்தினார். இதனால் தங்கும் விடுதி இருப்பது  தெரியாமல் இருப்பதாக ஷாஜகானிடம், உரிமையாளர் கோவிந்தராஜ்  முறையிட்டுள்ளார். அதற்கு நீ யாரிடம் வேண்டும் என்றாலும் புகார் செய்,  எனக்கு பயமில்லை என கூறியுள்ளார்.

இதுகுறித்து கோவிந்தராஜ் ஈரோடு  டவுன் போலீசில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புகார் அளித்தார். ஆனால்  போலீசார் பெயரளவுக்கு விசாரணை நடத்தி விட்டு, ஷாஜகானிடம் கடையை ஆக்கிரமிப்பு இல்லாமல் போட வேண்டும் என அறிவுறுத்தி விட்டு சென்று  விட்டனர். ஆனால், தொடர்ந்து ஷாஜகான் தனியார் விடுதியின் இடத்தினை ஆக்கிரமித்து கடையை நடத்தி வந்தார். இதனால் அதிருப்தி அடைந்த கோவிந்தராஜ்  ஈரோடு எஸ்.பி., சக்தி கணேசன் அறிமுகப்படுத்திய ஹலோ சீனியர் திட்டத்தில்  புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில், சம்மந்தப்பட்ட விடுதி முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு டவுன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்பில்  இருந்த பொருட்களை போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும், அவருக்கு உரிய  இடத்தில் மட்டும் கடை போட கோரி அறிவுறுத்தினர். இந்த சம்பவத்தின் காரணமாக மணிக்கூண்டு ரோட்டில் வாகனங்கள் செல்ல சில மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: