பிரகாசபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கான கழிப்பறையை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

சாத்தான்குளம், மே 14: சாத்தான்குளம் அருகே பிரகாசபுரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள்  தாசில்தாரிடம் மனு அளித்தனர். சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பிரகாசபுரத்தில் அங்குள்ள  கிறிஸ்தவ ஆலயம் அருகில் ஊராட்சிக்கான டிவி அறை மற்றும் பொதுகழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறையை அருகில் உள்ள ஆர்.சி தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில் இந்த கழிப்பறை மற்றும் டிவி அறை மிகவும் பழுதடைந்து அபாயநிலையில் உள்ளதாகவும், அதனை அப்புறப்படுத்திட வேண்டும் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊராட்சி சார்பில் அந்த கழிப்பறையை அப்புறப்படுத்த முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வர்க்கீஸ் தலைமையில் கிராம மக்கள் சாத்தான்குளம் தாசில்தார் ஞானராஜை சந்தித்து மனு அளித்தனர். மனுவில், பிரகாசபுரத்தில் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டுக்கு கழிப்பறை செயல்பாட்டில் உள்ளது. ஆனால் சிலர் அதனை இடித்து அப்புறப்படுத்திட வேண்டும் என புகார் அளித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்காக உள்ள கழிப்பறையை அப்புறப்படுத்திட அனுமதிக்க கூடாது, அதனை கிராம மக்கள் சார்பில் பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

அப்போது சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி உள்ளிட்ட கிராம மக்கள் உடன் இருந்தனர். மனுவை பெற்ற தாசில்தார், நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாகவும், மாவட்ட கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: