விளைச்சல் இல்லாததால் வரத்து இல்லை கோவில்பட்டியில் எலுமிச்சை விலை உயர்வு

கோவில்பட்டி, மே 4: கோவில்பட்டியில் எலுமிச்சம் பழங்கள் வரத்து குறைவால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. கிலோ ₹200க்கு விற்கப்படுகிறது. கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி, நாலாட்டின்புதூர், கழுகுமலை, மந்தித்தோப்பு, இளையரசனேந்தல், கடலையூர், ஊத்துப்பட்டி, காமநாயக்கன்பட்டி, இடைசெவல் உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் எலுமிச்சை பயிரிட்டு உள்ளனர். தற்போது கோடை வெயில் வாட்டுவதால் எலுமிச்சை மரங்களில் இருந்து பூக்கள் வாடி கீழே உதிர்கின்றன. மேலும் அனலுடன் காற்று வீசுவதாலும், மரத்தில் காய்கள் காய்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி தோட்டங்களில் தற்போது எலுமிச்சை பழங்களின் விளைச்சல் குறைந்து உள்ளது. இதன் காரணமாக கோவில்பட்டி கடைகளுக்கு பழங்களின் வரத்தும் குறைந்துள்ளது.

தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால், எலுமிச்சை பழங்களின் சாறு கலந்த சர்பத், ஜூஸ் மற்றும் குளிர்பான வகைகளை மக்கள் நாடி செல்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. வரத்து குறைவு மற்றும் மக்களின் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் கோவில்பட்டியில் உள்ள மொத்த வியாபார கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ₹200க்கு விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோவிற்கு ₹150 வரை மட்டுமே எலுமிச்சை பழங்கள் விற்கப்பட்டது. விலை உயர்வால் கிலோ கணக்கில் எலுமிச்சை பழங்களை வாங்கிய மக்கள், தற்போது எண்ணிக்கை கணக்கிலேயே வாங்கி செல்கின்றனர். இந்த விலை ஏற்றம், வரும் நாட்களில் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

The post விளைச்சல் இல்லாததால் வரத்து இல்லை கோவில்பட்டியில் எலுமிச்சை விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: