சீர்காழி, மே 10: பாலித்தீன் பைகள் தடை அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து அனைத்து கடைகளிலும் பாலித்தீன் பயன்படுத்துவது குறைந்து காணப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக பாலித்தீன் பைகள் தாராளமாக புழக்கத்திற்கு வந்துள்ளது. தமிழக அரசு பாலித்தீன் பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்தது. ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் பெரும்பாலான வியாபாரிகள் பாலித்தீன் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெரும்பாலான கடைகளில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட் புகையிலை பொருட்கள் போன்று பாலித்தீன் பைகளும் விற்பனைக்கு வந்துள்ளது.
பாலித்தீன் பைகள் தொடர்பாக ஆய்வு நடத்த வரும் அதிகாரிகள் பெயரளவிலேயே ஆய்வு நடத்தி செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாலித்தீன் பைகள் மொத்தமாக விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்துவது இல்லை. என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பாலித்தீன் பைகளை மொத்தமாக விற்பனை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தாலே கடைகளில் பாலித்தீன் பைகள் பயன்படுத்துவது தடுக்க முடியும். அரசு தடையை மீறி பாலித்தீன் பைகள் விற்பனை செய்யப்படும் கடைகளில் அதிரடியாக சோதனை செய்து பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிக்கப்பட்டால் மட்டுமே பாலத்தின் விற்பனையை முற்றிலும் தடுக்க முடியும்.மேலும் கடைகளில் பாலித்தீன் பைகளால் ஏற்படும் சுகாதார கேடுகள் குறித்து கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். சில வியாபாரிகள் பாலித்தீன் பைகளால் ஏற்படும் தீமைகளை அறிந்து பாலித்தீன் பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர்.
பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே பாலித்தீன் பைகளை முற்றிலுமாக ஒழிக்க முடியும். அப்படி செய்தால் மட்டுமே பாலித்தீன் பைகளால் ஏற்படும் சுகாதார கேட்டை தடுக்க முடியும். பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது கண்டிப்பாக துணிப்பைகளை எடுத்துச் செல்ல முன்வர வேண்டும். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பெயரளவில் கடைகளில் ஆய்வு நடத்தாமல் முறையாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.