வேதாரண்யம் அருகே தகட்டூர் சத்திரகுளம் குப்பையால் ஆக்கிரமிப்பு சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி

வேதாரண்யம், ஏப்.24: வேதாரண்யம் தாலுகா தகட்டூர் சத்திர  குளத்தின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வேதாரண்யம் தாலுகா   தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி பஸ் நிறுத்தம்  அருகே  சத்திர குளம் உள்ளது.   இந்த குளத்தின் அருகே வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கடைதெரு உள்ளிட்டவை உள்ளன. தகட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்டவர்கள் சத்திரகுளத்தை குளிப்பதற்கும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர்.  இந்த குளத்தின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த  குப்பைகள் நீண்ட நாட்களாக அள்ளாமல் அப்படியே கிடப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.  இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் குளத்தை சுற்றி கருவேலசெடிகள் வளர்ந்து  குளத்தில் விழுவதால் தண்ணீர் கறுப்பு நிறமாக மாறியுள்ளது.  கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குளம் தூர்வாரப்படாமல் உள்ளதால் தண்ணீர் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள்  வேதனை  தெரிவித்தனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சத்திர குளத்தின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: