திருப்பாலைக்குடியில் பேருந்து நிலையத்திற்குள் வர மறுக்கும் பஸ்கள் அவதிப்படும் பயணிகள்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 26:  திருப்பாலைக்குடியில் பேருந்து நிலையத்திற்குள் வராமல் புறக்கணித்து விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக பேருந்துகள் சென்று விடுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள திருப்பாலைக்குடி கிராமத்தில் ஊருக்குள் பேருந்து நிலையம் உள்ளது. இரண்டு ஆண்டு காலங்களாக பஸ்கள் அனைத்தும் ஊருக்குள் இருந்த பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வது வழக்கமாக இருந்தது. கடந்த சில மாதங்களாகவே ஊருக்குள் வருவதை புறக்கணித்து விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாகவே அனைத்து பஸ்களும் சென்று விடுகின்றன. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கஷ்டப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக பஸ்களை ஊருக்குள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சசிக்கணி கூறுகையில், ‘பஸ் ஊருக்குள் வராமல் கிழக்கு கடற்கரை வழியாக போவதால் திருப்பாலைக் குடிக்கு வரக்கூடிய பொதுமக்களை பழங்கோட்டையிலே இறக்கி விட்டு சென்று விடுகின்றார்கள். இரவு நேரங்களில் வயதான முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு சென்று வரும் நோயாளிகள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி உரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ்கள் அனைத்தும் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: