உடன்குடி அனல்மின்நிலைய பணிக்கு மணல் ஏற்றி செல்லும் லாரிகளால் தொடரும் விபத்து

உடன்குடி, மார்ச் 14:  உடன்குடி அனல்மின்நிலைய பணி, துறைமுகம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக இரவு, பகலாக நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கென பாறாங்கற்கள் சாத்தான்குளம் பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுகணக்கான லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. அனல்மின்நிலைய பணிகளுக்கு மணல்கள் சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி, மெஞ்ஞானபுரம் பகுதிகளில் உள்ள குளங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. 24மணி நேரமும் தொடர்ச்சியாக லாரி ஓட்டும் ஓட்டுநர்களுக்கு பணியின் போது இடைவேளை என்பதே கிடையாது. காரணம் அவர்களுக்கு மணல், கற்கள் எத்தனை நடை கொண்டு செல்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் தான் சம்பளம். இதன் காரணமாக கூடுதல் நடை எடுக்க வேண்டுமென கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் லாரிகளை ஓட்டுகின்றனர். இதன் காரணமாக அவ்வப்போது விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஆனால் போலீசார் அந்த வாகனங்களை எச்சரிப்பது கூட கிடையாது.  நேற்று அதிகாலை உடன்குடி அனல் மின் நிலைய பணிக்கு மணல் ஏற்றி சென்ற லாரி  விவசாயி மீது மோதியதில் அவர் தலை நசுங்கி பலியானார். திசையன்விளை அணைக்கரையைச் சேர்ந்தவர் மூக்காண்டி என்ற முத்துராமலிங்கம்(55). விவசாயியான இவர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தீவிர பக்தர் ஆவார். மாதாந்திர செவ்வாய்க்கிழமையில் இரவில் கோயிலில் தங்கி அதிகாலை சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

நேற்று அதிகாலை வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்த மூக்காண்டி பின்னர் வீட்டுக்கு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தார். உடன்குடி அய்யாநகர் பகுதியில் வரும் போது அனல்மின்நிலைய பணிக்கு மணல் அள்ளிச்சென்ற லாரி, பைக் மீது மோதியது. இதில் மூக்காண்டி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அதிகாலை நேரம் விபத்து நடந்ததால் யாருக்கும் தெரியவில்லை. காலை வழக்கம் போல் மக்கள் நடமாட்டம் ஆரம்பித்த பிறகே விபத்து குறித்து தகவல் தெரியவந்தது. தகவலறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய லாரி குலசேகரன்பட்டினம் பைபாஸ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய டிரைவர் குலசேகரன்பட்டினம் தியாகராஜபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் காளிமுத்து என்பவரை தேடி வருகின்றனர்.

மின் கம்பம் சேதம்

மெஞ்ஞானபுரம் மெயின் பஜாரில் சாலையின் நடுவே மின்கம்பம், வழிகாட்டும் பலகை அமைந்திருந்தது. நேற்று அதிகாலை சாத்தான்குளம் பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மெஞ்ஞானபுரம் மெயின் பஜார் வழியாக கடந்த போது வழிகாட்டும் பலகை, மின்கம்பத்தின் மீது மோதியது. அப்போது மின்கம்பத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த சிமெண்ட் பூச்சுகள் இடிந்து விழுந்தன. இந்த காட்சிகள் மெயின் பஜாரில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதங்களில் பகிரப்பட்டு வருகிறது. மின்கம்பத்தை சேதப்படுத்தியது குறித்து மின்வாரிய அதிகாரிகளும் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் மின்கம்பத்தை சேதப்படுத்திய லாரி மற்றும் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: