வெயிலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் வார்டு தொடக்கம்

தூத்துக்குடி, மே 5: கோடை வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்க தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் வார்டு என்கிற சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது என மருத்துவமனை டீன் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கி வருகிற 28ம்தேதி வரை உள்ளது. இதையொட்டி கோடை வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் வார்டு என்கிற சிறப்பு வார்டு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமார் கூறியதாவது:
கோடை காலத்தில் அனல் கக்கும் அதிக வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு ஹீட் ஸ்ட்ரோக், மயக்கம், நீரிழப்பு, சோர்வு போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சைப் பிரிவு அருகே 6 படுக்கைகள் கொண்ட குளிரூட்டப்பட்ட தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வார்டில் சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையுள்ள பொதுமக்கள் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வெயிலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் வார்டு தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: