இருக்கை வசதி இல்லாத வாலாஜாபாத் பஸ் நிலையம் : உட்கார இடம் இல்லாமல் பொதுமக்கள் சிரமம்

வாலாஜாபாத், மார்ச் 8: வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பஸ் நிலையம், காவல் நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், ரயில் நிலையம், அரசு மற்றும் வங்கிகள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. வாலாஜாபாத்ைத ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள், சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வாலாஜாபாத் பஸ் நிலையம் வந்து, அங்கிருந்து பல பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் சென்று வருகின்றனர். குறிப்பாக வாலாஜாபாத்  பஸ் நிலையத்தில் இருந்து ஒரகடம், காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம், பெரும்புதுார், செங்கல்பட்டு உள்பட பல இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள். முதியோர், பெண்கள் உள்பட பொதுமக்களும்  வாலாஜாபாத் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்காணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால், அவர்கள் பஸ்கள் வரும்வரை காத்திருப்பதற்கு, இருக்கை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால், நீண்ட நேரம் உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டே இருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.இதில் முதியோர் மற்றும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சிலர், பஸ் நிறுத்தும் இடத்தில் திண்ணை போல் உள்ள நடைமேடையில் அமர்ந்து கொள்கின்றனர். எனவே, வாலாஜாபாத் பஸ் நிலையத்தில், பயணிகளுக்கு போதிய இருக்கைகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும், மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து பெதுமக்கள் கூறுகையில், வாலாஜாபாத் பஸ் நிலையம் முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு வந்து பெரும்புதூர், தாம்பரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் சென்று வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருந்தாலும், நிற்கவும் இடம் இல்லை. இதில் மருத்துவமனைக்கு செல்வதற்காக வரும் நோயாளிகள் உட்கார இடமில்லை. ஒரு இருக்கையும் இல்லாமல் இருக்கிறது. இந்த பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான இருக்கைகள் அமைக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்துவிட்டோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். இதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்றனர்.

Related Stories: