அண்ணாமலை பல்கலையில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சிக்கான தானியங்கி பந்துவீசும் இயந்திரம்

சிதம்பரம், பிப். 21:  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சிக்கான தானியங்கி பந்துவீசும் இயந்திரத்தை துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் மாணவர்களின் பயிற்சிக்கு இயக்கி வைத்தார். பல்கலைக்கழக மானியக்குழு நிதி உதவியுடன் செயல்பாட்டிற்கு வந்துள்ள இந்த திட்டம் விளையாட்டுத்துறை மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.     துணைவேந்தர் முருகேசன் விளையாட்டு பயிற்சி மாணவர்களிடம், ”தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தினார். மாணவர்கள் இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு நம் பல்கலைக்கழகத்திற்கும்,

நாட்டிற்கும் பெருமை சேர்க்க மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

 மின்னணு கருவியியல் துறை உதவி பேராசிரியர் தியாகராஜன் இயந்திரத்தின் செயல்பாட்டை விளக்கி கூறினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக தொண்ணூறாம் ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மின்னணு கருவியியல் துறை தலைவர் பேராசிரியர் கயல்விழி இந்த இயந்திரத்தை விளையாட்டு துறை தலைவர் பேராசிரியர் கோபிநாத்திடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பொறியியல் புல முதல்வர் பேராசிரியர் கிருஷ்ணமோகன், கல்வியியல் புல முதல்வர் பேராசிரியர் ஞானதேவன், பல்வேறு துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Stories: