ஆம்பூர் அருகே வனப்பகுதியில் நக்சல் தடுப்பு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

ஆம்பூர், பிப் 20: ஆம்பூர் அருகே வனப்பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் வனச்சரகத்தில் சாரங்கல் முதல் மாதகடப்பா வரை ஆந்திர மாநில எல்லையை ஒட்டி கவுண்டன்யா காடுகள் உள்ளன. இதையொட்டி துருகம் காப்புக்காடுகள் மற்றும் ஊட்டல் காப்புக்காடுகள் தமிழக எல்லையில் உள்ளது. ஆந்திர வனப்பகுதியையொட்டி உள்ளதால் தீவிரவாதிகள் நடமாட்டம், சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளதா என அவ்வப்போது நக்சல் தடுப்பு போலீசார் வனத்துறையினருடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், வேலூர் மாவட்ட மலைப்பகுதிகளில் நாட்டு துப்பாக்கி தயாரிக்கும் கும்பல் ஒன்று ஈடுபட்டு வருவதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது காப்புக்காடுகளில் புளி மகசூல் காலம் என்பதால்,

புளி சாகுபடி செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், புளி மகசூல் உள்ளிட்ட பல்வேறு மகசூல் பெற்ற ஒப்பந்ததாரரின் காவல்காரர்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகளாக அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. சில நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம், துப்பாக்கிகள் சத்தம் கேட்பதாகவும் வனத்துறையினருக்கு இப்பகுதி மக்கள் தகவல் கொடுத்து வந்தனர். இதையடுத்து, நேற்றுமுன்தினம் ஆம்பூர் வனவர் கருணாமூர்த்தி தலைமையில் சிறப்பு இலக்கு படையின் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வனக்காப்பாளர்கள் சுரேஷ், விஸ்வநாதன் உள்ளிட்ட வனத்துறையினர் என 20க்கும் மேற்பட்ட கூட்டுப்படையினர் ஆம்பூர் காப்புக்காடுகள் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.

இவர்கள் சாரங்கல், குந்தேலிமூலை, கத்தாழை குழி, பாம்பு ஜொனை கெட்டு, சாரமலை கானாறு, ஆலமரத்து குழி, குண்டிப்புலியான் பாறை, கொய்யா மரத்து சதுரம், ஒக்கலக்கெட்டு, கரடிக்குட்டை, துலுக்கன் கானாறு, ஜம்பூட்டல் வழியாக ஊட்டல் தேவஸ்தானம் ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும், பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு பிரசாரமும், துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் சிறப்பு இலக்கு படையின் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வனத்துறையினர் காப்புக்காடுகள் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: