திருப்புட்குழி ஊராட்சியில் வறட்சியால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை: ஆழ்துளை கிணறு அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம், பிப்.19: காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி ஊராட்சி, அகரம் கிராமத்தில் குடிநீர் பிரச்னையை போக்க ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் காலி குடுங்களுடன்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புட்குழி ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் சுமார் 120 அடி கொண்ட போர் போடப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது, வறட்சி காரணமாக  கடந்த ஒன்றரை மாதமாக மோட்டாரில் இருந்து தண்ணீர் வரவில்லை.இதனால் பொதுமக்கள், அருகில் வேறு எங்கும் போர் இல்லாததால் தொலைதூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.  எனவே, எங்கள் பகுதிக்கு சுமார் 1000 அடி அளவில் போர் அமைத்து, அதற்கு உண்டான மின் மோட்டார்  பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், குடிநீர் பிரச்னையை போக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை கலெக்டர் அலுவல வளாகத்தில்,  பெண்கள் சுமார் 50 பேர், காலி குடங்களுடன் சென்று, கலெக்டர்  அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதை அறிந்ததும், அதிகாரிகள் அவர்களிடம் சமரசம் பேசினர். பின்னர், மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அவர்களின், கோரிக்கை மனுவை  அதிகாரிகள் பெற்றனர்.

Related Stories: