திமுக ஊராட்சி சபை கூட்டங்களில் வழங்கப்பட்ட 1,000 மனுக்கள் கலெக்டரிடம் ஒப்படைப்பு சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வழங்கினார்

நாகர்கோவில், பிப்.6: திமுக ஊராட்சி சபை கூட்டங்களில் பெறப்பட்ட ஆயிரம் மனுக்களை சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ குமரி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்தார்.திமுக சார்பில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதி எம்எல்ஏக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 9ம் தேதி தொடங்கி திமுக ஊராட்சி சபை கூட்டங்கள் நடந்து வருகின்றன. குமரி கிழக்கு மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 51 ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.இதில் பல்வேறு கூட்டங்களில் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றிருந்தார். இதில் இலவச வீட்டுமனை பட்டா, விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்களை பொதுமக்கள் அதிக அளவில் வழங்கினர்.

இவ்வாறு பெறப்பட்ட 1,000 மனுக்களை சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தலைமையில் திமுக நிர்வாகிகள் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரிடம் ஒப்படைக்க வருகை தந்தனர். ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் இல்லை. இதைத்தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் அந்த 1,000 மனுக்களையும் வழங்கினர். திமுக பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவூது, பூதலிங்கம்பிள்ளை மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: