இன்ஸ்டாகிராமில் பழகி பெண்ணிடம் 13 பவுன் நகை மோசடி கருங்கல் அருகே பரபரப்பு

நாகர்கோவில், ஜூன் 10: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே இன்ஸ்டாகிராமில் பழகிய நபர், தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 13 பவுன் தங்க செயினை அபகரித்து சென்று விட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜன். இவரது மனைவி பெனிட்டா (31). இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், திருநெல்வேலியை சேர்ந்த சிவ சுப்பிரமணியன் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் போனில் பேசத் தொடங்கிய அவர், தனக்கு முக்கிய பிரமுகர்களை தெரியும். அவர்கள் மூலம் ஏராளமானவர்களுக்கு அதிக சம்பளத்தில் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுத்து உள்ளதாக கூறினார். அதன்படி தனக்கும் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து சம்பவத்தன்று சான்றிதழ் சரிபார்க்க வேண்டும் என்று கூறி வீட்டுக்கு வந்தவர், தனது கழுத்தில் கிடந்த 13 அரை பவுன் தங்க செயினை பார்த்து விட்டு தருவதாக கூறி வாங்கினார். பின்னர் செயினுடன் மாயமாகி விட்டார் என கூறி உள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில் பெனிட்டா அளித்த புகாரின் பேரில், சிவ சுப்பிரமணியன் மீது ஐபிசி 406 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

The post இன்ஸ்டாகிராமில் பழகி பெண்ணிடம் 13 பவுன் நகை மோசடி கருங்கல் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: