அண்ணாமலை காலி பெருங்காய டப்பா தமிழகம் பெரியார் மண் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது

நாகர்கோவில் , ஜூன் 5: கோணம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் 40க்கு 40 என்ற வெற்றியை திமுக கூட்டணி பெற்றிருக்கிறது. இந்த மண் பெரியார் மண் என்பது இந்த உலகத்திற்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது . கலைஞர் கண்ட ஜனநாயகத்தை காப்பாற்றும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருக்கும் வகையில் இந்த வெற்றியை தமிழக மக்கள் தந்து இருக்கிறார்கள். கருத்துக்கணிப்புகள் எல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்திருக்கிறது. ஜனநாயகத்திற்கு கடுகளவு பாதிப்பு வராது என்பதை நிரூபிக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.

வாரணாசியில் கடந்த முறை ஆறரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி இந்த முறை ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒன்றிய அரசின் மீது மக்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவு நிரூபித்திருக்கிறது.400க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம் என்று கூறி வந்தவர்கள் தற்போது மைனாரிட்டி நிலையை எட்டி இருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் ஜனநாயகத்தின் மீதும், கூட்டுறவு மீதும் அதிக நம்பிக்கை கொண்டவர்கள்.

இன்று அனைவரும் ஒன்றிணைந்து பிரதமரை தேர்வு செய்யக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த வாய்ப்பை சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் பயன்படுத்தி கொள்வார்கள் என்று நம்புகிறேன் . சி.பி.ஐ , வருமான வரித்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து ஒன்றிய அரசு எவ்வாறெல்லாம் மிரட்டியது என்பதை இந்த நாடு அறியும். சந்திரபாபு நாயுடு போன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களும் நன்கு அறிவார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியது போல் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. கோவையில் பா.ஜ. தலைவர் அண்ணாமலையின் தோல்வி எதிர்பார்த்தது தான் .அவர் காலி பெருங்காய டப்பா என்று அடிக்கடி நான் கூறி வருகிறேன். அது நிரூபணம் ஆகி இருக்கிறது.இனியாவது மதத்தை வைத்து அரசியல் செய்யாமல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக பாஜகவினர் மாற வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.

The post அண்ணாமலை காலி பெருங்காய டப்பா தமிழகம் பெரியார் மண் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: