காஞ்சிபுரம், பிப்.5: காஞ்சிபுரம் மாவட்டம் நத்தாநல்லூரில் கழிவுநீர் செல்வதற்காக கட்டப்பட்டதாக கூறப்படும் கால்வாயை காணவில்லை என கலெக்டர் பொன்னையாவிடம், அதே கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் நத்தாநல்லூர் கிராமத்தில் திருவள்ளுவர் தெரு உள்ளது. இங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பத்திர் வசிக்கின்றனர். இந்தத் தெருவின் இருபுறமும் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக வீட்டில் இருந்து வெளியேற்றும் தண்ணீர், மனிதக் கழிவுகள் கலந்த அசுத்தநீர் ஆகியவற்றை சாலையில் விடுகின்றனர்.இதுபோல், வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தெருவில் குளம்போல் தேங்கி, சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு மேலாக ஆறாக வழிந்தோடுகிறது. இதனால் இந்த தெரு சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதையொட்டி குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் அனைவரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.மேலும் சில குடும்பத்தினர் சாலையை ஒட்டி சிமென்ட் தொட்டியை, கட்டி நீரை தேக்கி வைப்பதால் டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயமும் உள்ளது.இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இணையவழியில் புகார் அளித்திருந்தேன். அதன் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர், மேற்கண்ட தெருவை நேரில் ஆய்வு செய்து புகைப்படம் எடுத்து கொண்டு தற்காலிக கால்வாய் அமைப்பதாகக் கூறினார்.